தெரு முனை மரபுடைமைக் காட்சிக்கூடங்கள் : பாலெஸ்தியர்

img-fluid

தெருமுனை மரபுடைமைக் காட்சிக்கூடங்கள் திட்டம்

தெருமுனை மரபுடைமைக் காட்சிக்கூடங்கள் திட்டத்தைத் தேசிய மரபுடைமைக் கழக அரும்பொருளகங்கள், மரபுடைமை நிலையங்கள், சமூகக் காட்சிக்கூடங்கள், அந்தந்த வட்டாரங்களின் கடை உரிமையாளர்கள் கூட்டிணைந்து செயல்படுத்துகின்றனர். சமூகத்துடனான பங்காளித்துவத்தை வலுப்படுத்தி, அன்றாடப் பயன்பாட்டிடங்களின் ஆழ்ந்த மரபுடைமை சிறப்பைப் பற்றிய விழிப்புணர்வை வளர்ப்பது இத்திட்டத்தின் நோக்கம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கம்பக்கங்களில் குறைந்தது 30 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள வட்டாரக் கடை உரிமையாளர்களுடன் தேசிய மரபுடைமைக் கழகம் அணுக்கமாகச் செயல்பட்டு, அந்தக் கடைகளின் தொழில் மற்றும் வர்த்தகத்தின் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும் “சிறு அரும்பொருளகங்களைக்” கூட்டாக உருவாக்குவதற்கு இத்திட்டம் வழிகோலுகிறது. வட்டாரத் தளத்தில் அமைந்திருக்கும் இந்தக் காட்சிக்கூடங்களில், கடைகளின் கதைகளை விவரிக்கும் வரலாற்று ஆவணங்கள், புகைப்படங்கள், கலைப்பொருட்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

நிதியுதவி, கண்காட்சியைத் தொகுப்பதற்கான ஆதரவு, காட்சியமைப்புக்கு உதவி ஆகியவற்றை வழங்குவதோடு, உரைகள், உலாக்கள், பயிலரங்குகள் போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்குவதற்கும் வட்டாரக் கடை உரிமையாளர்களுடன் தேசிய மரபுடைமைக் கழகம் இணைந்து செயல்படும். அதோடு, சிங்கப்பூர் மரபுடைமை விழா, அந்தந்த அக்கம்பக்கங்களில் உள்ள மரபுடைமை நிலையங்களின் கலாசார விழாக்கள் போன்ற முக்கிய மரபுடைமைக் கழக நிகழ்ச்சிகளில் பங்குபெறவும் கடைகளுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

 

வரலாறு நிறைந்த மாவுப் பலகாரங்கள்: லூங் ஃபாட் தாவ் சார் பியா

Loong Fatt Tau Sar Piah

லூங் ஃபாட் கடையின் பிரபலமான தாவ் சார் பியா பலகாரத்திற்காக மக்கள் எப்போதும் நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் காணலாம். பாசிப்பருப்பு பூரணமுள்ள பாரம்பரிய பலகாரம் இது. பாலெஸ்தியர் சாலையில் இன்றுவரை நீடித்து நிலைத்திருக்கும் ஆகப் பழமையான பாரம்பரிய காப்பிக்கடையாக இந்தக் கடை இருந்தாலும், ஆரம்பத்தில் 1948-ஆம் ஆண்டில் இது மேற்கத்திய பாணி பேக்கரி கடையாகவே தொடங்கியது.

லூங் ஃபாட் கடையைத் தொடங்கிய லீ வாங் லோங் (1922-2018), சீனாவின் ஹய்னான் நகரிலிருந்து சிங்கப்பூருக்கு முதன்முதலில் வந்தபோது வீட்டுப் பராமரிப்பாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு அவர் ஆங்கிலேய பாணி “க்ரீம் பஃப்ஸ்” மற்றும் இதர வகையான இனிப்புப் பலகாரங்களைச் செய்யக் கற்றுக்கொண்டார். 1948-ல், இந்த ஒற்றை மாடி கடையில் பேக்கரியுடன் காப்பிக்கடை தொடங்கினார். அந்தக் கடை 1950-களிலும் 1960-களிலும் சிறப்பாக நடந்தது. ஆனால், 1970களில் வியாபாரம் குறையத் தொடங்கியபோது, லூங் ஃபாட் தாவ் சார் பியா செய்யத் தொடங்கினார்.

இன்று, லீ குடும்பத்தார் லூங் ஃபாட் கடையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். கடையில் பணி புரிவோர், ஒவ்வொரு நாளும் 3,000 முதல் 4,000 தாவ் சார் பியா தயாரிக்கிறார்கள். இதைச் செய்யும் முறை இரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது. ஆனால், பலகாரத்தின் மேற்பகுதியை மொறுமொறுப்பாக்க, உயர்தர வெண்ணெய் சேர்க்கப்படுவதாக 1970களில் இருந்து லூங் ஃபாட் கடையில் பணிபுரிந்து வரும் திருவாட்டி லூ சுவான் முய் சொல்கிறார். இதனால்தான், பாரம்பரிய தியோச்சூ பாணியில் செய்யப்படும் தாவ் சார் பியாவின் மென்மையான மேற்பகுதியிலிருந்து இந்தக் கடையின் தயாரிப்பு மாறுபட்டிருக்கிறது.

இந்தக் கடை சில முறை புதுப்பிக்கப்பட்டிருந்தாலும், ஆரம்பத்தில் இருந்த பச்சை, வெள்ளை நிறச் சுவர் பதிப்புக் கற்களும், மரத்திலான நீள் இருக்கைகள், மேசைகள் சிலவும் இன்னமும் அங்குள்ளன. லூங் ஃபாட் கடையில் பாரம்பரியத்திற்கு என்றுமே வரவேற்பு குறையவில்லை. அதனால்தான் இன்னமும் மக்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வந்து மனதார உண்டு, பெரும்பாலும் ஒரு பெட்டிக்குக் குறையாமல் தாவ் சார் பியா வாங்கிச் செல்கிறார்கள்.

சந்றதக் கறை முதல் உணவகம் வறர: லலாய் க பபஸ்ட் சிக்கன் றரஸ்

Loy Kee Best Chicken Rice

கையால் அரைத்த இஞ்சி சேர்த்த கமகமக்கும் சாதம், சதைப்பற்றுள்ள கோழித்துண்டு, சொந்தமாகத் தயாரித்த பூண்டு-மிளகாய் சாந்து உண்டு மகிழ, 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த முனைக் கடைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். ஆனால், லோய் கீ 1953-ல் இருந்தே பாலெஸ்தியர் வட்டாரத்தில் பாரம்பரிய ஹய்னானீஸ் கோழிச் சோறு விற்று வருவது பலருக்கும் தெரியாது.

லோய் கீயைத் தொடங்கிய லோய் நீ இன் (1920-2007), 1940-களில் ஹய்னானில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தார். பிற்பாடு, அவரது மனைவி குவா டீயும் சிங்கப்பூருக்கு வந்தார். லோய் தம்பதியர், ஹய்னானீஸ் கோழிச் சோறும் கோழி, பன்றியிறைச்சி கஞ்சியும் விற்கும் சிறிய கடையை 1953-ல் ரேமன் சந்தையில் (இந்நாளின் வாம்போ மக்கான் பிளேஸ்) திறந்தார்கள். ரேமன் எஸ்டேட் என்றழைக்கப்பட்ட சிங்கப்பூர் மேம்பாட்டு அறக்கட்டளையின் (SIT) புதிய குடியிருப்புப் பேட்டைக்கு அருகில் இந்தச் சந்தை அமைந்திருந்தது.

தொழில் அமோகமாக நடந்தபோதிலும், லோய் குடும்பத்தார் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அதிகாலையில் காலை உணவு சாப்பிட விரும்புவோருக்குக் கஞ்சியும் கோழியும் தயார்ப்படுத்த, தனது பெற்றோர் பல சமயங்களில் சந்தைக் கடையிலேயே இரவில் தூங்குவார்கள் என நினைவுகூர்ந்தார் லோயின் இளைய மகன் ஜேம்ஸ் லோய். இந்த வியாபாரம் 1970-கள் வரை நன்றாக நடந்து வந்தது. அதன்பிறகு, ரேமன் எஸ்டேட் வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பேட்டையாக மறுமேம்பாடு செய்யப்பட்டது.

1980களில், லோய் தம்பதியர் ஓய்வுபெற்று, தங்கள் பிள்ளைகளிடம் தொழிலை ஒப்படைத்தனர். இன்று, அவர்களது மூத்த மகன் லோய் சாய் ஹொங், வாம்போ மக்கான் பிளேசில் குடும்பத்தின் கோழிச் சோறு கடையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். இளைய மகன் ஜேம்ஸ், இந்த முன்னாள் காப்பிக்கடைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு, 1994-ல் லோய் கீ பெஸ்ட் சிக்கன் ரைஸ் கடையாக மாற்றினார்.

“பதன் கைலின்” சுறவ: லாம் இலயா காப்பித்தூள் பதாழிற்சாறல

Lam Yeo Coffee Powder Factory

டான் தியன் காங் (1912-2008) இந்தக் கடையை 1960-ல் திறந்ததிலிருந்து, தரமான உள்ளூர் காப்பிப் பிரியர்கள் லாம் இயோவின் காப்பி விதைகளை நாடி வருகின்றனர். “லாம் இயோ” என்பது “நன்யாங்” அல்லது “தென் கடல்” என்பதற்கான ஹாக்கியன் சொல். இது தென்கிழக்காசியாவைக் குறிக்கிறது. 1950-களில் பிரபலமாக இருந்த நன்யாங் சியாங் பாவ் சீன மொழி செய்தித்தாளில் உதவி ஆசிரியராக டான் பணியாற்றி இருந்ததால், தனது கடைக்கு இந்தப் பெயரை வைத்தார்.

டான் ஒரு காப்பி தொழிற்சாலையில் சிறிது காலம் விற்பனையாளராக வேலை செய்த பிறகு, 1959-ல் செய்தித் துறையிலிருந்து காப்பித்தூளுக்கு மாறினார். ஆரம்பத்தில், கையால் சேகரிக்கப்பட்ட காப்பி விதைகளை, வீடு வீடாகச் சென்று ஒரு வேன் வாகனத்தின் பின்பகுதியிலிருந்து விற்பனை செய்தார். அவரது தொழில் பெருகியபோது, டானும் அவரது மனைவி லிம் சொக் டீயும் 1960-ல் லாம் இயோ காப்பித்தூள் தொழிற்சாலை என்ற பெயரில் ஒரு கடையை அமைத்தனர்.

ஆரம்பகால ஆண்டுகளில், லாம் இயோவின் கடையில் 10 பிரத்யேக காப்பித்தூள் கலவைகள் விற்கப்பட்டன. கடைக்கு நேரடியாக வருவோருக்கு அல்லது தீவு முழுவதிலும் உள்ள காப்பிக்கடைகளுக்கு காப்பி விதைகள் உடனுக்குடன் அரைத்து, பொட்டலம் கட்டிக் கொடுக்கப்பட்டன. டான் இந்த வட்டாரம் முழுவதிலும் இருந்து நேர்த்தியான காப்பி விதைகளைத் தருவித்தார். அவற்றைக் கவனமாக வறுத்து, ரசிகர்களைக் கவரக்கூடிய காப்பிக் கலவைகளைத் தயாரித்தார்.

இன்று, டானின் சந்ததியினர் தங்களது நீண்டகால வாடிக்கையாளர்கள் விரும்பிச் சுவைத்த கடையின் காப்பிக் கலவைகளை இன்னமும் பரிமாறுகின்றனர். ஆனால், லாம் இயோ காலத்திற்கு ஏற்ப மாறி, பிரேசில், எத்தியோப்பியா, கொலம்பியா போன்ற நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட காப்பிக் கலவைகளையும் இப்போது வழங்குகிறது. புதிய தலைமுறை காப்பிப் பிரியர்களைக் கவர்வதற்கு இவை உதவுகின்றன.

பாரம்பரியத்திற்கு ஒரு பாராட்டு: ஸ்வட்லாண்ட்ஸ் பிபரட் அண்ட் லபக்கரி

Sweetlands Bread & Bakery

1970-களில், சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 200 பாரம்பரிய பேக்கரி கடைகள் இருந்தன. ஆனால் இன்று, 10-க்கும் குறைவானவையே எஞ்சியுள்ளன. அவற்றுள் ஒன்று, 1960-களில் முதன்முதலாகத் திறக்கப்பட்ட ஸ்வீட்லாண்ட்ஸ் பிரெட் அண்ட் பேக்கரி. ஆரம்பத்தில் இந்தக் கடையின் பெயர் கிம் கியட் பேக்கரி. பாலெஸ்தியர் சாலையிலும் அதற்கு அப்பாலும் அமைந்திருந்த காப்பிக்கடைகளுக்கு ரொட்டிகளை விநியோகித்தது இந்த பேக்கரி.

கடையின் முதல் உரிமையாளர்கள் 2001-ல் ஓய்வுபெற்றபோது, இங் யெக் ஹெங் (பிறப்பு.1956) என்பவர் பேக்கரியை ஏற்று நடத்தினார். அவர் கடைக்கு ஸ்வீட்லாண்ட்ஸ் எனப் பெயரிட்டார். இங்கின் நிர்வாகத்தின்கீழ், பேக்கரி விரிவடைந்து, புதிய உணவு நிலையங்களுக்கும் நவீன காப்பிக்கடைகளுக்கும் விநியோகம் செய்யத் தொடங்கியது. இந்த பேக்கரியில் தினமும் உத்தேசமாக 1,200 ரொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. பாரம்பரிய வகை ரொட்டி, முட்டுக்கை ரொட்டி, பன் ரோட்டி போன்றவை அவற்றுள் அடங்கும்.

பேக்கரியின் கடை மாடி எப்போதும் பரபரப்பாக இருக்கும். பேக்கிங் பணியாளர்கள் மாவும் நொதியும் நன்றாகக் கலக்கும் வகையில் மாவைப் பிசையவேண்டும். ரொட்டியை பேக் செய்வதற்குமுன், பேக்கிங் தட்டுகளில் எண்ணெய் தடவவேண்டும். பிறகு, பெரிய சுழலும் சூட்டடுப்பில் தட்டுகளை வைத்து பேக் செய்வார்கள். முடிவில், ஒவ்வொரு ரொட்டியின் கடினமான பழுப்புநிற மேல் “தோலையும்” கவனமாக வெட்டுவார்கள்.

இன்று, ஸ்வீட்லாண்ட்ஸ் பிரெட் அண்ட் பேக்கரி கடை மூன்றாவது உரிமையாளரிடம் உள்ளது. இங் ஓய்வுபெற்ற பிறகு மூன்றாவது உரிமையாளர் கடையை ஏற்று நடத்துகிறார். பெரிய தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் ரொட்டி வகைகள் இன்றைய சந்தையில் ஆதிக்கம் செலுத்தினாலும், பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் காயா ரொட்டியை மக்கள் இன்றுவரை விரும்புகிறார்கள் என்பதற்கு ஸ்வீட்லாண்ட்ஸின் நீடித்த நிலைத்தன்மையே ஆதாரம்.

அக்காலத்திற்குள் ஒரு பார்றவ: லிம் லக க ஆப்டிகல் அண்ட் கான்பைக்ட் பலன்ஸ் பசன்ைர்

Lim Kay Khee Optical and Contact Lens Centre

லிம் கே கீ ஆப்டிகல் அண்ட் கான்டெக்ட் லென்ஸ் சென்டர், 1920-களில் தொடங்கும் வரலாற்றுடன், சிங்கப்பூரின் ஆகப் பழமையான மூக்குக்கண்ணாடி கடைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. கடையைத் தொடங்கிய லிம் கே கீ (1913-1988), ஒன்பது வயதில் சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தார். ஷங்ஹாயைச் சேர்ந்த ஒருவரின் மூக்குக்கண்ணாடி கடையில் தொழில் பழகுநராகச் சேர்ந்து, மூக்குக்கண்ணாடி தயாரிக்கும் திறன்களை அவர் கற்றுக்கொண்டார்.

இரண்டாம் உலகப் போரின்போது, லிம்மின் முதலாளிகள் கொல்லப்பட்டனர். ஆனால் லிம், மூக்குக்கண்ணாடி செய்வதற்கான கருவிகளோடும், செய்முறை குறிப்பேடுகளோடும் டாய் கின் சாலையிலுள்ள ஒரு வீட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். இந்தக் கருவிகளும் லிம்மின் திறன்களும் அவரின் உயிரைக் காத்தன. ஜப்பானிய வீரர் ஒருவர், மூக்குக்கண்ணாடி ஒன்றை வாங்கி வரச்சொல்லி லிம்மின் நண்பருக்கு உத்தரவிட்டிருந்தார். தனது உயிருக்குப் பயந்த அந்த நண்பர், லிம்மிடம் உதவி நாடினார். லிம் செய்து கொடுத்த மூக்குக்கண்ணாடி ஜப்பானிய வீரரைத் திருப்திப்படுத்தியதால், இருவரும் உயிர் தப்பினார்கள்.

1946-ல், இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பிறகு, மூக்குக்கண்ணாடி சட்டங்களையும் இதர மூக்குக்கண்ணாடி பொருட்களையும் இறக்குமதி செய்யும் மொத்த விற்பனை தொழில் நடத்தும் கிரேட் சைனா டிரேடிங் கம்பெனியை லிம் அமைத்தார். இந்நிறுவனம் தொடக்கத்தில் 383 பாலெஸ்தியர் சாலை என்ற முகவரியில் அமைந்திருந்தது. பிற்பாடு, 1960-ல் இந்தக் கடைவீட்டுக்கு மாறிச்சென்றது. இந்தக் கடை 1970-களில் கண்விழி வில்லைகளையும் விற்பனை செய்யத் தொடங்கியபோது, தற்போதைய பெயர் சூட்டப்பட்டது.

பார்வைச்சோதனை நுட்பர்களாக அனைத்துலக சான்றுபெற்றுள்ள லிம்மின் பிள்ளைகள், குடும்பத்தின் இரண்டு மூக்குக்கண்ணாடி கடைகளை இங்கும் பெனின்சுலா பிளாசாவிலும் இன்று நடத்தி வருகின்றனர். மூக்குக்கண்ணாடிகளின் பாணிகள் காலத்திற்கேற்ப மாறினாலும், இந்தக் கடையின் ஆரம்பகாலத்து பல்வண்ணத் தரைப்பதிப்புக் கற்களும் நன்கு பயன்படுத்தப்பட்ட பார்வைத்திறன் அட்டவணைகளும், மூக்குக்கண்ணாடி கருவிகளும், 70-க்கும் மேலான ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்டு இன்றுவரை குடும்பத் தொழிலாகத் தொடரும் வரலாற்றை வாடிக்கையாளர்களின் பார்வைக்குக் கொண்டு வருகின்றன.

GameOn Nila Jejak Warisan Edition

GameOn Nila Jejak Warisan Edition

Click here to download the app.


GameOn Nila Jejak Warisan III

 
close button
hhlogo