தெருமுனை மரபுடைமைக் காட்சிக்கூடங்கள் திட்டம்
தெருமுனை மரபுடைமைக் காட்சிக்கூடங்கள் திட்டத்தைத் தேசிய மரபுடைமைக் கழக அரும்பொருளகங்கள், மரபுடைமை நிலையங்கள், சமூகக் காட்சிக்கூடங்கள், அந்தந்த வட்டாரங்களின் கடை உரிமையாளர்கள் கூட்டிணைந்து செயல்படுத்துகின்றனர். சமூகத்துடனான பங்காளித்துவத்தை வலுப்படுத்தி, அன்றாடப் பயன்பாட்டிடங்களின் ஆழ்ந்த மரபுடைமை சிறப்பைப் பற்றிய விழிப்புணர்வை வளர்ப்பது இத்திட்டத்தின் நோக்கம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கம்பக்கங்களில் குறைந்தது 30 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள வட்டாரக் கடை உரிமையாளர்களுடன் தேசிய மரபுடைமைக் கழகம் அணுக்கமாகச் செயல்பட்டு, அந்தக் கடைகளின் தொழில் மற்றும் வர்த்தகத்தின் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும் “சிறு அரும்பொருளகங்களைக்” கூட்டாக உருவாக்குவதற்கு இத்திட்டம் வழிகோலுகிறது. வட்டாரத் தளத்தில் அமைந்திருக்கும் இந்தக் காட்சிக்கூடங்களில், கடைகளின் கதைகளை விவரிக்கும் வரலாற்று ஆவணங்கள், புகைப்படங்கள், கலைப்பொருட்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
நிதியுதவி, கண்காட்சியைத் தொகுப்பதற்கான ஆதரவு, காட்சியமைப்புக்கு உதவி ஆகியவற்றை வழங்குவதோடு, உரைகள், உலாக்கள், பயிலரங்குகள் போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்குவதற்கும் வட்டாரக் கடை உரிமையாளர்களுடன் தேசிய மரபுடைமைக் கழகம் இணைந்து செயல்படும். அதோடு, சிங்கப்பூர் மரபுடைமை விழா, அந்தந்த அக்கம்பக்கங்களில் உள்ள மரபுடைமை நிலையங்களின் கலாசார விழாக்கள் போன்ற முக்கிய மரபுடைமைக் கழக நிகழ்ச்சிகளில் பங்குபெறவும் கடைகளுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.
தேக்கா இறைச்சிக்கடை பாரம்பரியம்: எஸ்ஐஎஸ் ப்ரீமியம் மீட்ஸ்
எஸ்ஐஎஸ் ப்ரீமியம் மீட்ஸ் இறைச்சிக் கடை, 60 ஆண்டுகளுக்குமேல் லிட்டில் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்குத் தரமான இறைச்சியை விநியோகம் செய்து வருகிறது. இந்தத் தொழிலைத் தொடங்கியவர் சின்னசாமி இருதயசாமி. அவர் 1949ல் தமிழ் நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து முதலில் ஒரு காப்பிக் கடையிலும், பின்னர் இறைச்சிக் கடையிலும் வேலை செய்தார். சின்னசாமி 1953ல் பழைய தேக்கா சந்தையில் எஸ் ஐ சாமி என்ற பெயரில் சொந்த இறைச்சிக் கடையைத் திறந்தார்.
இந்தக் கடையும், சந்தையின் மற்ற கடைகளும், சாலையின் மறுபக்கத்தில் அமைக்கப்பட்ட தற்போதைய தேக்கா நிலையத்திற்கு 1982ல் மாறிச் சென்றபோது, எஸ் ஐ சாமி கடையின் வாடிக்கையாளர்களும் நன்மதிப்பும் மேலும் பெருகின. எஸ் ஐ சாமி கடையின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் இந்து, முஸ்லிம் சமயங்களைச் சேர்ந்தவர்கள். அதனால், மாட்டிறைச்சி அல்லது பன்றியிறைச்சி விற்பனை செய்வதைக் கடை தவிர்த்தது.
1983ல், எஸ் ஐ சாமி கடை “எஸ் ஐ சாமி டிரேடிங் கம்பெனி பிரைவெட் லிமிடெட்” எனப் பதிவு செய்யப்பட்டு, மற்ற ஈரச்சந்தைகள், உணவகங்கள், உணவு விநியோக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இறைச்சியை மொத்த விற்பனை செய்யும் தொழிலில் விரிவடைந்தது. நிறுவனத்தின் இறைச்சி விநியோகிப்பாளர்களும் விரிவடைந்தனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து கப்பலிலும் விமானத்திலும் இறைச்சி இறக்குமதிகள் வந்திறங்கின.
2018ல், எஸ் ஐ சாமி கடையின் பெயர் “எஸ்ஐஎஸ் ப்ரீமியம் மீட்ஸ்” என மாற்றப்பட்டது. இந்தக் குடும்பத் தொழிலை, சின்னசாமியின் மகள் ஜாய்ஸ் கிங்ஸ்லி இப்போது நிர்வகிக்கிறார். ஜாய்ஸ் சிறு பிள்ளையாக இருந்தபோது, அப்பாவுடன் அவரது சந்தைக் கடைக்கு அடிக்கடி சென்று, வாடிக்கையாளர்களுக்கு அவர் விற்பனை செய்வதைப் பார்ப்பார். ஜாய்ஸ் 1995ல் தொழிலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டபோது, கோழி, கடலுணவு ஆகியவற்றையும் விற்பனை செய்யத் தொடங்கினார். அதோடு, வீட்டுக்கு அனுப்பி வைக்கும் சேவை உள்ளிட்ட பற்பல சேவைகளையும் வழங்கினார்.
துணிக்கடை சாம்ராஜ்யமாக வளர்ந்த சாலையோரக் கடை: ஹனிபா டெக்ஸ்டைல்ஸ்
நேர்த்தியான சேலைகள் மலிந்து கிடக்கும் ஹனிபா டெக்ஸ்டைல்ஸ், ஒரு காலத்தில் கேம்பல் லேனில் சிறிய சாலையோரக் கடையாகத் தொடங்கியது என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். இந்தத் துணிக்கடைத் தொழிலைத் தொடங்கியவர் ஓ.கே. முகமது ஹனிபா. அவர் 1957ல் சிங்கப்பூருக்கு வந்து, பல்வேறு வேலைகளை ஆரம்பத்தில் செய்து வந்தார். பின்னர், சொந்தமாகத் துணிக்கடைத் தொழிலைத் தொடங்கினார். பத்து ஆண்டுகளுக்குள், சாலையோர நடைபாதையிலிருந்து ஒரு கடைவீட்டுக்கும், முடிவில் அதே சாலையிலிருந்த ஒரு கட்டடத்திற்கும் தொழில் இடம் மாறிச்சென்றது.
ஆரம்பத்தில், ஜப்பானில் தயாரிக்கப்பட்ட “நைலெக்ஸ்” சேலைகளை ஹனிபா விற்பனை செய்தார். எடை குறைவான அந்தச் சேலைகள், அன்றாடப் பயன்பாட்டுக்கு உகந்ததாக இருந்ததால் நல்ல வரவேற்பைப் பெற்றன. அவர் ஜப்பானின் பல்வேறு முக்கிய சேலை தயாரிப்பாளர்களுடன் பங்காளித்துவம் செய்து, சிங்கப்பூரிலும் இந்தியாவிலும் அவர்களின் ஏகபோக விநியோகிப்பாளர் ஆனார். ஆனால், சிங்கப்பூர் இந்தியப் பெண்களின் விருப்பங்களும் செலவு செய்யும் பழக்கங்களும் காலப்போக்கில் மாறியதால், விழாக்காலங்களுக்குப் பலரும் பட்டுச் சேலைகளை உடுத்த விரும்பினர். இதனால், அதிகரித்துவந்த வாடிக்கையாளர் தேவையை நிறைவேற்ற, இந்தியா முழுவதிலும் பல்வேறு விநியோகிப்பாளர்களுடன் தொடர்புகளை வளர்த்துக் கொண்டார் ஹனிபா.
கால ஓட்டத்தில், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஹனிபா டெக்ஸ்டைல்ஸ் தனது தொழிலைப் பன்பயப்படுத்தி, விரிவடைந்து வந்துள்ளது. சிராங்கூன் சாலையிலும் டன்லப் ஸ்திரீட்டில் கடைகளை வாங்கி, ஆண்களுக்கான உடைகள், மளிகைப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள் போன்றவற்றை உள்ளூர் மக்களுக்காக விற்கத் தொடங்கியது. தெற்காசியாவுக்குப் பயணம் செல்வோர் அல்லது அங்கிருந்து திரும்பி வருவோருக்காக, பயணப் பெட்டிகள், அன்பளிப்புப் பொருட்கள் போன்றவற்றையும் விற்பனை செய்தது.
இன்று, ஹனிபா டெக்ஸ்டைல்ஸுக்கு மலேசியாவில் கிளைகளும் இந்தியாவில் அலுவலகங்களும் உள்ளன. கடை நிறுவனரின் மகன் அப்துல் சமத் ஹனிபா, மகள் ரசினா பேகம் ஹனிபா உட்பட, ஹனிபா குடும்பத்தின் இரண்டாம் தலைமுறையினர் இந்தக் கிளைகளையும் அலுவலகங்களையும் நடத்தி வருகின்றனர். நிறுவனத்தின் வளர்ச்சியோடு, பல சிங்கப்பூர் இந்தியர்களின் வீடுகளில் தரமான சேலைகளுக்குப் பெயர்பெற்ற நிறுவனமாக ஹனிபா நீடிக்கிறது.
நூற்றாண்டுகாலச் சைவப் பாரம்பரியம்: ஆனந்த பவன்
சிங்கப்பூரில் உள்ள ஆகப் பழமையான இந்தியச் சைவ உணவகங்களில் ஒன்று ஆனந்த பவன். குழந்தைவேலு முத்துசாமி கவுண்டர் இந்த உணவகத்தை நிறுவினார். அவரும் அவரது சகோதரர்களும் 1920களில் சிங்கப்பூருக்கு வந்தபோது உணவகத்தை அமைத்தனர்.
ஆரம்ப காலத்தில், குழந்தைவேலுவும் அவரது குடும்பத்தாரும் உணவகத்திற்கு மேலே இரண்டாவது மாடியில் வசித்தனர். மேசைகளைச் சுத்தம் செய்வது, கணக்கு பார்ப்பது போன்ற பல்வேறு பணிகளையும் குடும்பத்தாரே செய்தனர். ஆனந்த பவன் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே சைவ உணவை வழங்கி வருகிறது. வாழை இலையில் சாதத்துடன் காய்கறி மேங்கறிளைப் பாரம்பரியமாகப் பரிமாறுகிறது. ஆரம்பகால ஆண்டுகளில், கூலித் தொழிலாளர்களுக்குக் கட்டுப்படியாகும் உணவாக இது அமைந்தது.
குழந்தைவேலுவின் மறைவுக்குப் பிறகு, 1950கள் முதல் 1960கள் வரை, அவரது மைத்துனர் ராமசாமி உணவகத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். பிறகு, குழந்தைவேலுவின் மனைவி காளியம்மாளிடம் பொறுப்பை அவர் ஒப்படைத்தார். பிற்பாடு, குழந்தைவேலுவின் மகன்கள் எம்.கே. ராமச்சந்திரா, கே. நடராஜன் இருவரது நிர்வாகத்தின்கீழ் ஆனந்த பவன் உணவகம் இயங்கியது. இவர்கள், உற்பத்தித்திறனை மேம்படுத்த சமையலறையில் தானியக்கமயத்தை அறிமுகப்படுத்தினார்கள். இவர்களது நிர்வாகத்தின்கீழ், வாடிக்கையாளர்கள் காசாளர் முகப்பில் உணவை வாங்கிக்கொள்ளும் சுய சேவை முறையை லிட்டில் இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்திய கடைகளில் ஒன்றாக உணவகம் பெயர்பெற்றது.
இன்று, குழந்தைவேலுவின் பேரன் விரேன் எட்டிக்கன், ஆனந்த பவன் உணவகத்தை நிர்வகிக்கிறார். இவர் 2011ல் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அண்மையில், ஆனந்த பவன் மேலும் சில கிளைகளைத் திறந்தது, சமணர் உணவு, சித்த உணவு, புதுமையான கலப்புவகை உணவு போன்றவற்றையும் அறிமுகப்படுத்தியது. தொழில்நுட்பத்தையும் புத்தாக்கத்தையும் புகுத்துவதில் ஆனந்த பவன் தீவிர நாட்டம் கொண்டிருந்தாலும், வாடிக்கையாளர்களுக்குத் தரமான சைவ உணவைப் பரிமாறும் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து வருகிறது.
அத்தியாவசியப் பாரம்பரியப் பொருட்களுக்குப் பெயர்பெற்றது: ஜோதி ஸ்டோர் & புஷ்பக் கடை
இந்தியக் கலாசாரமும் பாரம்பரியமும் சார்ந்த அனைத்தும் கிடைக்கும் ஒரே இடமாகப் பரவலாகக் கருதப்படும் ஜோதி ஸ்டோர் & புஷ்பக்கடை, சிங்கப்பூரிலுள்ள இந்தியச் சமூகத்திற்கு நன்கு பழக்கப்பட்ட ஒரு பெயராகும். அச்சுக் கோர்ப்பவராகவும் நூலகராகவும் இருந்த முருகையா ராமச்சந்திரா, 1960ஆம் ஆண்டில் ஒட்டுக்கடையாக ஜோதி கடையைத் தொடங்கினார். தனது மகளின் பெயரில் அவர் தொடங்கிய இந்தக் கடை, ஆரம்பத்தில் லிட்டில் இந்தியாவில் வசித்துவந்த இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு மளிகைப் பொருட்களும் அன்றாட அத்தியாவசியப் பொருட்களும் விற்பனை செய்தது.
சிராங்கூன் சாலையில் இந்து ஆலயங்களுக்கு அருகில் கடை அமைந்திருப்பதால், காணிக்கையாகச் செலுத்துவதற்குப் பூமாலைகள் தேவைப்படுவதை ராமச்சந்திரா கவனித்தார். எனவே, பூமாலைகள் கட்டுவதற்குக் குடும்ப நண்பர் ஒருவர் அமர்த்தப்பட்டார். அவரது சகோதரரின் உதவியுடன், பூக்களுக்கும், சமயப் பொருட்களுக்கும், வீட்டுப் பொருட்களுக்கும் அதிகரித்துவந்த தேவையை நிறைவேற்ற ராமச்சந்திரா முனைப்புடன் செயல்பட்டார்.
காலப்போக்கில், இந்தியச் சமயச் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் ஏகப்பட்ட வகையான பொருட்கள் கிடைக்கும் இடமாக ஜோதி ஸ்டோர் & புஷ்பக்கடை நன்மதிப்பு பெற்றது. உள்ளூர் இந்தியச் சமூகத்தினர் கடைப்பிடிக்கும் சமய, கலாசார விழாக்களின் கால வரிசைப்படி பூஜை மற்றும் அலங்காரப் பொருட்களை வகைவகையாக வரிசைப்படுத்தி கடை வழங்குகிறது. அதோடு, இந்தியச் சமூகத்தினர் நாடும் அன்றாடப் பொருட்களின் வகைகளைப் புதிய தயாரிப்புகளுடனும் விரிவுபடுத்தி வருகிறது.
1981ல், ஜோதி ஸ்டோர் & புஷ்பக்கடை தற்போது அமைந்துள்ள 1 கேம்பல் லேன் எனும் முகவரியின் ஒரு பகுதிக்கு இடம் மாறியது. பின்னர், 1992ஆம் ஆண்டுக்குள், ஒட்டுமொத்த கட்டடத்திற்கும் விரிவடைந்தது. இன்று, ராமச்சந்திராவின் மகன் ராஜகுமார் சந்திரா கடையை நிர்வகிக்கிறார். லிட்டில் இந்தியாவில் பரபரப்பாக இயங்கி வரும் இந்த ஐந்து மாடிக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர் தொடர்ந்து தனிப்பட்ட சேவை வழங்கி வருகிறார்.
சுவைப்பொருள் காப்பாளர்: தண்டபாணி கம்பெனி பிரைவெட் லிமிடெட்
மஞ்சள், ஜாதிக்காய், சதகுப்பை முதல் கருஞ்சீரகம் வரை, பற்பல வகையான சுவைப்பொருட்கள் ஆசிய சமையலுக்குச் சுவை சேர்க்கின்றன. தண்டபாணி கம்பெனி, 1960கலிருந்து, பல வகையான சுவைப்பொருட்களை விற்பனை செய்து வருகிறது. உள்ளூர் பேரங்காடிகளில் அரிதாகக் காணப்படும் சுவைப்பொருட்கள் மட்டுமல்லாது, பிரபலமான இந்திய உணவு வகைகளுக்கான சொந்த மசாலைக் கலவைகளும் தண்டபாணியில் கிடைக்கும்.
தண்டபாணி கம்பெனியை நிறுவியவர் சண்முகம். இவர் 1946ல் சிங்கப்பூருக்கு வந்து, லிட்டில் இந்தியாவில் இருந்த தனது மாமாவின் கடையில் வேலை செய்தார். பின்னர், 1960களில் லிட்டில் இந்தியா ஆர்க்கேடில் சுவைப்பொருள் தொழிலைத் தொடங்கினார். சண்முகத்தின் இஷ்டத் தெய்வத்தின் பெயர் சூட்டப்பட்ட தண்டபாணி கம்பெனி, 1970கள் வரை சுவைப்பொருள் விற்பனையில் கவனம் செலுத்தியது. அதன்பின்னர், கேம்பல் லேனுக்கு இடம் மாறிச்சென்று, வள்ளி மாவு மில்ஸ் ஆலையை வாங்கியது. இதன்வழி, சண்முகம் தனது சொந்த சமையல் குறிப்புகளைக் கொண்டு, மசாலைக் கலவைகளை அரைத்து விற்பனை செய்யத் தொடங்கினார். இந்த மசாலைக் கலவைகள் இன்று வரை பல வீடுகளிலும் லிட்டில் இந்தியாவிலுள்ள உணவகங்களிலும் விரும்பி நாடப்படுகின்றன.
சுவைப்பொருட்கள் பல்வேறு ஆசிய சமையல்கலைகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுவதால், காலப்போக்கில் தண்டபாணி கம்பெனியின் வாடிக்கையாளர்களில் சீன உணவகங்களும் மலாய் குடும்பங்களும் சேர்ந்தன. எளியோருக்கு உணவு சமைத்து வழங்கும் இந்து கோயில்கள், புத்தர் கோயில்கள், சீக்கிய குருத்துவார்கள் (கோயில்கள்), பள்ளிவாசல்கள், சமூகநல இல்லங்கள் ஆகியவற்றுக்கும் தண்டபாணி கம்பெனி சுவைப்பொருட்களை விநியோகம் செய்கிறது.
இன்று, சண்முகம் குடும்பத்தின் இரண்டாம் தலைமுறையினர் தண்டபாணி கம்பெனியை நிர்வகிக்கின்றனர். கடையின் பாரம்பரியம் மாறாத பழைய தோற்றத்தை அவர்கள் இன்றுவரை தக்க வைத்திருக்கின்றனர். லிட்டில் இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் பல்வேறு சமூகங்களுக்கும் தரமான சுவைப்பொருட்களை அவர்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
குடும்ப உணவுப் பாரம்பரியம்: கோமள விலாஸ்
கோமள விலாஸ் உணவகம் 1947ல் தொடங்கப்பட்டது. அங்கு கிடைக்கும் இந்திய சைவ உணவைச் சுவைக்க பல தலைமுறையினர் உணவகத்தை நாடிச் செல்கின்றனர். இந்த உணவகத்தை நிறுவியவர் முருகையா ராஜூ. அதே இடத்தில் அதற்குமுன் செயல்பட்டு வந்த ஸ்ரீ கருணா விலாஸ் உணவகத்தில் அவர் வேலை செய்து வந்தார். கருணா விலாஸ் உணவகத்தின் உரிமையாளர்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல முடிவெடுத்தனர். அப்போது, முருகையா அந்தத் தொழிலை அவர்களிடமிருந்து வாங்கி, தனது முதலாளியின் மனைவியைக் கௌரவிக்கும் வகையில் அவரின் பெயரைக் கடைக்குச் சூட்டினார்.
கோமள விலாஸ் உணவகம் குடும்பத் தொழிலாக நடத்தப்பட்டது. முருகையாவின் குடும்பத்தினர் பல்வேறு பொறுப்புகளை ஏற்று, உணவகத்தைச் சீராக நடத்தி வந்தனர். “லெப்டினன்ட்” எனப் பிரியத்துடன் அழைக்கப்பட்ட அவரது சகோதரர் சின்னக்கண்ணு, தொழில் இயக்கத்தைக் கவனித்துக் கொண்டார். முருகையாவின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சிறு வயதிலிருந்தே உணவகத்தில் வேலை செய்து தொழிலைக் கற்றுக் கொண்டனர். உணவகத் தொழில் விரிவடைந்தபோது, அதிகமான ஊழியர்கள் வேலைக்குச் சேர்க்கப்பட்டனர். லிட்டில் இந்தியாவில் வாடிக்கையாளர்களைச் சந்திக்கும் காசாளர் பணிக்குப் பெண்களை அமர்த்திய முதல் சில உணவகங்களில் கோமள விலாஸ் உணவகமும் ஒன்று.
1950களில், பக்கத்தில் 78 சிராங்கூன் சாலை எனும் முகவரியில் அமைந்திருந்த இரண்டு மாடிக் கடைக்கு கோமள விலாஸ் விரிவடைந்தது. 1970களில், லிட்டில் இந்தியாவில் இரண்டாவது மாடியில் குளிர்சாதன வசதியுடன் உணவருந்தும் வசதியை வழங்கிய முதல் உணவகமாக கோமள விலாஸ் பெயர்பெற்றது. பாரம்பரியமான தென்னிந்திய உணவு வகைகளிலிருந்து மாறுபட்டு, 1970களில் பட்டூரா எனும் பஞ்சாபி உணவையும் உணவகம் முதல்முறையாக அறிமுகப்படுத்தியது.
1990களிலிருந்து, கோமள விலாஸ் உணவகத்திற்குக் கடை நிறுவனரின் மகன் ராஜூ குணசேகரன் பொறுப்பேற்றிருந்தார். பின்னர் 2015ல், முருகையாவின் பேரன் ராஜகுமார் குணசேகரன் பொறுப்பெடுத்துக் கொண்டார். அதன்பின்னர், மூன்றாம் தலைமுறை உரிமையாளர் கோமள விலாஸ் வழங்கும் உணவு வகைகளில் வட இந்திய சைவ உணவு வகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதோடு, 413 ரிவர் வேலி சாலை எனும் முகவரியில், “ஃபென்னல்” என்ற பெயரில் நவீன இந்திய சைவ உணவகத்தையும் தொடங்கியிருக்கிறார்.
மணப்பெண்கள், தொழிலதிபர்களின் நகை வியாபாரி: அணி மணி
அணி மணி என்றால் “ஆபரணங்களை அணி” என்று அர்த்தமாகும். அணி மணி 1948ல் தொடங்கப்பட்டது முதல், வாடிக்கையாளர்களுக்குப் பாரம்பரிய இந்திய ஆபரணங்களையும், தங்க நகைகளையும், நவரத்தினங்களையும் அணிவித்து வருகிறது. லிட்டில் இந்தியாவில் தங்க வியாபாரத்திற்கு நல்ல வரவேற்பிருக்கும் என்று நினைத்த ரத்னவேலுவும் அவரது சகோதரர்களும் பொற்சாலையை நிறுவினார்கள். தாலி போன்ற பாரம்பரிய நகைகளுக்கு வாடிக்கையாளர்கள் நாடிச்செல்லும் நகைக்கடையாக அணி மணி பொற்சாலை விளங்குகிறது.
அணி மணியின் வாடிக்கையாளர்கள் முதலீடு, பரம்பரை சொத்து அல்லது சமயச் சடங்குகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காகத் தங்க நகைகள் வாங்குகின்றனர். இந்தியச் சமூகத்தினரிடையில், அக்ஷய திரிதியை அன்று தங்கம் வாங்கும் வழக்கம் இக்காலத்தில் அதிக பிரபலமாகி வருகிறது. புனிதமான அந்நாளில் தங்கம் வாங்கினால் செல்வமும் செழிப்பும் கூடும் என்பது ஒரு நம்பிக்கை.
அணி மணி தொடங்கிய நாளிலிருந்தே, மணப்பெண்கள் அணியும் தாலியை வார்க்கும் நகைக்கடையாகப் பெயர் பெற்றிருந்தது. தெற்காசியப் பாரம்பரியப்படி, ஒவ்வொரு தாலியும் அந்தந்த குடும்பங்களின் வட்டார, சமயப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்பத் தனித்தன்மையுடன் தயாரித்துத் தரப்படும். தாலியின் முக்கியத்துவத்தால், குடும்பங்கள் தாலி வாங்குவதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் பஞ்சாங்கப்படி நல்ல நேரம் பார்ப்பார்கள். தாலியைப் பெற்றுக் கொள்வதற்காக வரும் இந்து குடும்பங்களுக்காக, அணி மணி தனது கடையிலுள்ள பீடத்தில் பிரார்த்தனைகள் நடத்துவது வழக்கம்.
தங்க நகைகள் தவிர, நவரத்தினக் கற்களையும் அணி மணி தருவித்துத் தருகிறது. தெற்காசியர்கள் தொழிலிலும் வாழ்க்கையிலும் நற்பேறு அடைய, நவரத்தினக் கற்களை அணிவது வழக்கம். அணி மணியின் நவரத்தின வல்லுநர்கள், வாடிக்கையாளர்களின் ஜாதகத்தின் அடிப்படையில் சரியான நவரத்தினக் கற்களைத் தேர்ந்தெடுத்து வருவார்கள். ஏனெனில், வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு நவரத்தினமும் ஒன்பது கிரகங்களில் ஒன்றுக்குப் பொருந்தும். ரத்னவேலு குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையினர் அணி மணியை இப்போது நிர்வகிக்கின்றனர். வாடிக்கையாளர்களுக்குத் தனிப்பட்ட முக்கியத்துவமிக்க நகைகளை அவர்கள் தொடர்ந்து வடிவமைத்துத் தருகிறார்கள்.
வாழையிலையில் அறுசுவை உணவு: பனானா லீஃப் அப்போலோ
பெயரில் இருப்பது போலவே, பனானா லீஃப் அப்போலோ உணவகம் 1974ல் தொடங்கப்பட்டது முதல் இந்நாள் வரை வாழை இலையில் உணவு பரிமாறும் தென்னிந்திய பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து வருகிறது. உணவகத்தின் நிறுவனரான எஸ். செல்லப்பன், தமது தந்தையிடம் சமையல் கற்றுக் கொண்டார். அவரது தந்தை, தொழிலதிபரும் கொடை வள்ளலுமான பி. கோவிந்தசாமி பிள்ளையிடம் சமையல்காரராக வேலை செய்தவர். செல்லப்பன் தனது சமையல் திறனைப் பயனுள்ள முறையில் பயன்படுத்த விரும்பி, சிறிய தோசை கடையுடன் உணவுத் தொழிலில் கால்பதித்தார். பின்னர், 24 கஃப் சாலை எனும் முகவரியில் சொந்த உணவகத்தைத் தொடங்கினார்.
பனானா லீஃப் அப்போலோ உணவகம் ஆரம்பத்திலிருந்தே மீன் தலைக் கறிக்குப் பெயர் பெற்று விளங்கியது. உள்ளூரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் குழம்பு வாடிக்கையாளர்களிடையில் வேகமாகப் பிரபலமடைந்தது. இரகசிய மசாலைப்பொருள் கலவையும் அன்னாசிப்பழமும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்தக் காரசாரமான குழம்பு, உணவகத்தின் சிறப்புப் பதார்த்தமாகத் திகழ்ந்து, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து வாடிக்கையாளர்களை ஈர்த்தது.
பனானா லீஃப் அப்போலோ உணவகம் 1983ல் ரேஸ் கோர்ஸ் சாலைக்கு இடம் மாறியது. உணவகத்திற்குக் கிடைத்த அமோக வரவேற்பால், ஒரு கடை உணவகம் மூன்று கடைகளை உள்ளடக்கிய உணவகமாக விரைவில் விரிவடைந்தது. அதோடு, கடையில் வழங்கப்படும் உணவு வகைகளை அதிகரித்து, வட இந்திய உணவு வகைகளையும் அறிமுகப்படுத்தியது. வியாபாரம் வெற்றிகரமாக நடந்ததால், லிட்டில் இந்தியா ஆர்க்கேட் கடைத்தொகுதியில் இன்னொரு கிளையை உணவகம் திறந்தது. 2020ல் சிக்ஸ்த் அவென்யூ, ரிவர்வேல் மால், டௌன்டவுன் ஈஸ்ட் ஆகிய வட்டாரங்களில் மேலும் மூன்று கிளைகள் திறக்கப்பட்டன.
இன்று, செல்லப்பனின் மகன் சி. சங்கரநாதன் பனானா லீஃப் அப்போலோ உணவகத்தை நிர்வகிக்கிறார். அவர் தனது மனைவி எஸ். ராஜேஸ்வரியுடன் சேர்ந்து, அப்போலோ செல்லப்பாஸ் பல்பொருள் கடையையும் நிர்வகிக்கிறார். இந்தக் கடையை அவரது குடும்பத்தினர் 2008ல் தொடங்கினார்கள். உணவகக் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், உணவுத் தொழிலைக் குடும்பத்தினரே தொடர்ந்து கவனித்துக் கொள்கின்றனர். உணவகங்கள் பயன்படுத்தும் மசாலாக் கலவையின் தரத்தை ராஜேஸ்வரி தாமே கண்காணிக்கிறார். அவர்களது மகன் எஸ். நிர்மல் ராஜ் புதிய கிளைகளை மேற்பார்வையிடுகிறார்.