தெருமுனை மரபுடைமைக் காட்சிக்கூடங்கள்: காத்தோங்-ஜூ சியாட்

img-fluid

தெருமுனை மரபுடைமைக் காட்சிக்கூடங்கள் திட்டம்

தெருமுனை மரபுடைமைக் காட்சிக்கூடங்கள் திட்டத்தைத் தேசிய மரபுடைமைக் கழக அரும்பொருளகங்கள், மரபுடைமை நிலையங்கள், சமூகக் காட்சிக்கூடங்கள், அந்தந்த வட்டாரங்களின் கடை உரிமையாளர்கள் ஆகியோர் கூட்டிணைந்து செயல்படுத்துகின்றனர். சமூகத்துடனான பங்காளித்துவத்தை வலுப்படுத்தி, அன்றாடப் பயன்பாட்டிடங்களின் ஆழ்ந்த மரபுடைமைச் சிறப்பைப் பற்றிய விழிப்புணர்வை வளர்ப்பது இத்திட்டத்தின் நோக்கம்.


தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கம்பக்கங்களில் குறைந்தது 30 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள வட்டார கடை உரிமையாளர்களுடன் தேசிய மரபுடைமைக் கழகம் அணுக்கமாகச் செயல்பட்டு, அந்தக் கடைகளின் தொழில் மற்றும் வர்த்தகத்தின் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும் “சிறு அரும்பொருளகங்களைக்” கூட்டாக உருவாக்குவதற்கு இத்திட்டம் வழிவகுக்கிறது. வட்டாரத் தளத்தில் அமைந்திருக்கும் இந்தக் காட்சிக்கூடங்களில், கடைகளின் கதைகளை விவரிக்கும் வரலாற்று ஆவணங்கள், புகைப்படங்கள், கலைப்பொருட்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

நிதியுதவி, கண்காட்சியைத் தொகுப்பதற்கான ஆதரவு, காட்சியமைப்புக்கு உதவி ஆகியவற்றை வழங்குவதோடு, உரைகள்,
சுற்றுலாக்கள், பயிலரங்குகள் போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்குவதற்கும் வட்டாரக் கடை உரிமையாளர்களுடன் தேசிய மரபுடைமைக் கழகம் இணைந்து செயல்படும். அதோடு, முக்கியமான மரபுடைமைக் கழகத்தின் நிகழ்ச்சிகளில் பங்குபெறவும் கடைகளுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

 

·       Street Corner Heritage Galleries: Katong-Joo Chiat

·       老店铺文化站:加东—如切

·       தெருமுனை மரபுடைமைக் காட்சிக்கூடங்கள்: காத்தோங்-ஜூ சியாட்

 


மூன்று தலைமுறைகளாகத் தொடரும் பாரம்பரியம்: குவே குவான் ஹுவாட் ஜூ சியாட் போப்பியா


சிங்கப்பூரின் ஆகப் பழமையான போப்பியா மற்றும் குவே பய் டீ தயாரிப்பாளர்களில் ஒன்று குவே குவான் ஹுவாட் ஜூ சியாட் போப்பியா கடை. சீனாவின் அன்சி நகரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த குவெக் ட்ரென் வென் என்பவர், 1938-ஆம் ஆண்டு 95 ஜூ சியாட் சாலை எனும் முகவரியில் இந்தக் கடையைத் தொடங்கினார். மெல்லிய மாவுத் தோலில் பொடியாக நறுக்கிய காய்கறிகளையும் மாமிசத்தையும் வைத்துச் சுருட்டி போப்பியா பலகாரம் செய்யப்படுகிறது. குவே பய் டீ பலகாரத்திற்கு அதே பூரணம் மெல்லிய ஓடுகளில் நிரப்பப்படுகிறது.

 

குவெக் தினமும் விடியற்காலையில் எழுந்து, அன்றைக்கான மாவைக் கையால் பிசையும் சிரமமான பணியைத் தொடங்குவார். ஆரம்பகாலங்களில், மீதப்பட்ட மாவைக் கொண்டு குவே பய் டீ ஓடுகள் செய்யப்பட்டன. அவரது பெரனக்கன் மனைவி டான் ஆ போ கொடுத்த யோசனை அது. குவெக்கின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் பெரனக்கன் குடும்பங்களாகவே ஆரம்பத்தில் இருந்தனர். ஆனால், அவரது கடை விரைவில் பிரபலமடையவே, ஜூ சியாட் குடியிருப்பாளர்கள் மட்டுமன்றி சிங்கப்பூர் முழுவதிலுமிருந்து அதிகமானோர் கடையைத் தேடிவர ஆரம்பித்தனர்.

 

அவர்களது 16 பிள்ளைகளும் கடையில் உதவி செய்தனர். ஆண் பிள்ளைகள் மாவுத் தோல் செய்ய பயிற்சி பெற்றனர். பெண் பிள்ளைகள் காரமும் இனிப்பும் கலந்த போப்பியா பூரணம் தயாரிக்க தாயின் வழிகாட்டலுடன் கற்றுக் கொண்டனர். இந்நிலையில், கடையில் தயாரிக்கப்படும் வீட்டுச் சுவைகளைச் சொந்தமாகச் செய்ய வாடிக்கையாளர்கள் பலரும் சிரமப்பட்டதை உணர்ந்த மூத்த மகன் கெர் செங் லாய், 1990-களில் போப்பியா பூரணங்களையும் சுவைச்சாறுகளையும் விற்பனைக்கு வழங்கினார். 

இன்று, மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த மைக்கல் வழிநடத்திச்செல்லும் குவே குவான் ஹுவாட் கடை, குடும்பமாகப் போற்றிக் காத்துவரும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், பாண்டான் சுவைசேர்த்த போப்பியா தோல் போன்ற புதிய தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்துகிறது. கடைக்கு நேரில் வரும் வாடிக்கையாளர்களுக்கு இணையாக இணையம்வழியும் விற்பனை நடைபெறுகிறது. இருந்தாலும், கடையைத் தொடங்கி வைத்தவரின் காலத்தால் அழியாத உத்திகளை அவரது மறைவுக்குப் பிறகும் கைவிடாமல் கட்டிக்காத்து போப்பியா தயாரிக்கிறது குவே குவான் ஹுவாட். 

 

பெரனக்கன் மரபாக உருமாற்றம் கண்ட சாலையோரக் கடை: கிம் சூ குவே சாங்



பெரனக்கன் பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் கிம் சூ குவெ சாங் கடை, ஆரம்பத்தில் ஜூ சியாட் பிளேஸ், எவரிட் சாலை சந்திப்பில் ஓர் ஆலமரத்தருகில் தற்காலிகக் கடையாகத் தொடங்கியது. லீ கிம் சூ என்பவர் 1945-ஆம் ஆண்டு கடையைத் தொடங்கினார்.  அந்தக் காலகட்டத்தின் பெரும்பாலான நோன்யாக்களைப் (பெரனக்கான் பெண்கள்) போலல்லாமல், தனது பாட்டி டொக் சியூ நியோ கற்றுக்கொடுத்த சமையல்கலையைப் பயன்படுத்தி குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு கடையைத் திறந்தார் லீ. அவரது உணவும் கனிவும் ஜூ சியாட் சமூகத்தை விரைவில் கவர்ந்தன. சிங்கப்பூர் முழுவதிலுமிருந்து வாடிக்கையாளர்களையும் ஈர்த்தன. 

 

ஆனால், அவரது தனிச்சிறப்புவாய்ந்த குவே சாங் (பெரனக்கன் அரிசி டம்ப்ளிங்ஸ்) பலகாரமே பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்தது. அதனால், அந்தப் பலகாரத்தில் லீ கவனம் செலுத்தினார். 1970-களில், 60 ஜூ சியாட் பிளேஸ் எனும் முகவரியில் அமைந்திருந்த கடைவீட்டுக்கு அவர் மாறிச்சென்றார். கையால் செய்யப்படும் அவரது டம்ப்ளிங்ஸ் இன்றுவரை அங்கு தொடர்ந்து விற்பனையாகின்றன.

 

லீயின் மருமகள் ஹெலன் லிம், 1997-ல் சிறிய அளவிலான டம்ப்ளிங்ஸை அறிமுகப்படுத்தினார். லீக்கு ஆரம்பத்தில் அதில் அதிக நம்பிக்கை இல்லாதபோதிலும், அது பிரபலமடைந்தது. மாமியாரின் நம்பிக்கையைப் பெற்ற லிம், தனது கணவர் வோங் சின் மின்னுடன் சேர்ந்து கடைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். கோழி டம்ப்ளிங்ஸ், சைவ இறைச்சி நிரப்பப்பட்ட டம்ப்ளிங்ஸ் போன்ற புதுமைகளையும் லிம் அறிமுகப்படுத்தினார். பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் போன்ற பரவல்களால் டம்ப்ளிங்ஸ் தொழில் பாதிப்படையாதிருக்க இவை உதவின. பாட்டி டொக்கின் சமையல்குறிப்புகளைப் பயன்படுத்தி மற்ற பல குவே பலகாரங்களையும் அறிமுகப்படுத்தினார் லிம். இதன்வழி தொழில் விருத்தியடைந்தபோது, 2003-ல் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் ஒரு கடையை அமைத்தார்.

 

இன்று, லீயின் பேரப்பிள்ளைகள் தொழிலைத் தொடர்ந்து நடத்துகின்றனர். அவர்கள் கடையை விரிவுபடுத்தி, பெரனக்கன் உணவு, பெரனக்கன் உடை, சிறிய காட்சிக்கூடம் போன்றவற்றுடன் பெரனக்கன் மரபைக் காட்சிப்படுத்தியுள்ளனர். அதே வேளையில், பாட்டியின் சமூக உணர்வையும் தரத்தையும் கட்டிக்காத்து வருகின்றனர்.

 

திகட்டாத அருஞ்சுவை: ஜூ சியாட் ஃபெய் ஃபெய் வன்ட்டான் நூடல் ஹவுஸ்

ஜூ சியாட் ஃபெய் ஃபெய் வன்ட்டான் நூடல் ஹவுஸில், புதிதாகத் தயாரித்த பன்றியிறைச்சி டம்ப்ளிங்ஸ், சார்சியூ (கென்டனீஸ் பாணியில் அனலில் வாட்டிய பன்றியிறைச்சி), பிரத்யேக மிளகாய்ச் சாறு ஆகியவற்றுடன் பரிமாறப்படும் கையால் செய்த வழுவழுப்பான முட்டை நூடல்ஸுக்குப் பெயர்பெற்றது. சாதாரணத் தள்ளுவண்டியில் துவங்கிய இக்கடை, சான் சின் யாமால் 70 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.

சான் 1922-ஆம் ஆண்டு 17 வயதில் சீனாவின் குவாங்ஜாவ் நகரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தார். ஆரம்பத்தில், ஜாலான் புசாரிலிருந்த நூடல் தொழிற்சாலையில் தனது திறன்களை வளர்த்துக் கொண்டார். அதன்பின், உணவங்காடிக் கடைக்காரர்களுக்கு நூடல்ஸ் விற்பனை செய்வதற்காக ஜூ சியாட்டுக்கு மாறிச்சென்றார். போருக்குப் பிறகு, அவர் உணவு வியாபாரம் செய்யத் தொடங்கினார். தனது மகன்களுடன் தினந்தோறும் ஜூ சியாட் வீதிகளை வலம் வந்தார். அவரது பேரன் லிம் லூன் ஹுவாட் மிதிவண்டியில் முன்னால் சென்று, தங்களது வருகையை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்த்தார்.

 

1970-களில், 72 ஜூ சியாட் பிளேஸ் எனும் முகவரியில் அமைந்திருந்த காப்பிக்கடையை சான் வாடகைக்கு எடுத்தார். கொழுகொழுப்பாக இருந்த தனது இரண்டு பேரன்களை மனதில் கொண்டு, கடைக்கு ஃபெய் ஃபெய் (கென்டனீஸ் மொழியில் பருமன்”) எனப் பிரியத்துடன் பெயர் சூட்டினார். சான் 2000-ஆம் ஆண்டு காலமானபின், 20 வயதிலிருந்து ஃபெய் ஃபெய் கடையில் வேலை செய்துவந்த பேரன் லிம், அதன் மூன்றாம் தலைமுறை உரிமையாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஜூ சியாட்டுக்கு இரவு நேரத்தில் வரும் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, கடையை இருபத்துநான்கு மணிநேரமும் திறந்து வைத்திருக்க முடிவெடுத்தார் லிம்.

லிம் காலப்போக்கில் கோழி கட்லட் நூடல்ஸ், யொங் தாவ் ஃபூ (பூரணம் நிரப்பிய தவ்வு) போன்ற புதிய பதார்த்தங்களை அறிமுகப்படுத்தினார். வாடிக்கையாளர்களுக்கு இனிய அனுபவம் வழங்க, 2023-ல் 45 ஜூ சியாட் பிளேஸ் முகவரிக்கு லிம் மாறிச்சென்றார். இருந்தாலும், சானைப் போல் அதே உயர்தரமான நூடல்ஸ் தயாரித்து பரிமாறி, ஒவ்வொரு நூடல்ஸ் கிண்ணத்திலும் அவரது சமையல்கலை மரபு நீடித்து நிலைத்திருப்பதை ஃபெய் ஃபெய் உறுதி செய்கிறது.

பெரனக்கன் சமையல்கலைப் பாரம்பரியக் கொண்டாட்டம்: குவான் ஹோ சூன் உணவகம்



யாப் சீ குவீ என்பவர் 1953-ல் தொடங்கிய குவான் ஹோ சூன் உணவகம், சிங்கப்பூரின் ஆகப் பழமையான பெரனக்கன் உணவகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த உணவகத்தின் பிரசித்திபெற்ற ஹாக்கியன்-பெரனக்கன் பதார்த்தங்களான ஆயாம் புவா கெலுவாக் (கெலுவாக் கடலைகள் சேர்க்கப்பட்ட கோழி), ஹீ பியோ (மீன் இரைப்பை சூப்) போன்றவை தலைமுறை தலைமுறையாகக் குடும்பங்களைக் கவர்ந்து வருகின்றன.

 

யாப் 1918-ஆம் ஆண்டு ஹைனானில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தார். இவர் பெரனக்கன் வம்சாவளியைச் சேர்ந்தவரல்ல என்றாலும், பல்வேறு பெரனக்கன் குடும்பங்களில் வீட்டுப் பணியாளராக வேலை செய்தபோது சமையல் திறன்களை வளர்த்துக் கொண்டார். அவர் வேலை செய்த குடும்பங்களில் ஒன்று சியூ ஜூ சியாட் குடும்பம். பின்னர், 185 ஜூ சியாட் சாலை எனும் முகவரியில் சொந்தமாகக் காப்பிக்கடை ஒன்றைத் தொடங்கினார். இவரது சமையல் திறன் பற்றிக் கேள்விப்பட்ட மற்ற பெரனக்கன் குடும்பங்கள், தங்களது வீட்டில் ஆடம்பரமான டொக் பாஞ்சாங் விருந்து (பல்வகை உணவுகள் நிறைந்த நீண்ட மேசை) சமைக்க இவரையும் இவரது மகன் காவ் சூனையும் அழைக்கத் தொடங்கினர்.

 

வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகியதால், 1953-ல் 214 ஜூ சியாட் சாலை முகவரியில் பெரிய உணவகம் ஒன்றைத் தொடங்கினார் யாப். திருமண விருந்துகள் முதல் இறுதிச்சடங்குகள் வரை பலதரப்பட்ட ஒன்றுகூடல்களுக்கு உகந்தவாறு அமைக்கப்பட்டிருந்த அந்த உணவகத்திற்கு, தனது மூன்று மகன்களின் பெயர்களையும் சேர்த்து “குவான் ஹோ சூன்” எனப் பெயரிட்டார். யாப் காலமான பிறகு, மகன் காவ் சூன் தனது உணவுப் பிரியத்தின் காரணமாக உணவகத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். காலஞ்சென்ற திரு லீ குவான் இயூ போன்ற முக்கிய பிரமுகர்களை உணவகம் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது காவ் சூனின் மகள் ஜென்னி நடத்திவரும் இந்த உணவகம், 2009-ல் 38/40 ஜூ சியாட் பிளேஸ் எனும் முகவரிக்கும், பின்னர் 2022-ல் 200 ஜூ சியாட் சாலை முகவரிக்கும் மாறிச்சென்றது. தனது சொந்தத் தயாரிப்புகளான குவே சாலாட் (கவுனி அரிசியில் பாண்டான் சுவைசேர்த்த கஸ்டர்ட்) போன்ற புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்திய ஜென்னி, குவான் ஹோ சூன் உணவகத்தில் பாரம்பரிய முறைப்படி பெரனக்கன் உணவு தயாரித்து, வாடிக்கையாளர்கள் விரும்பி உண்ணும் பழமைமாறா சுவையைத் தொடர்ந்து பரிமாறி வருகிறார்.

கடைசித் துளி வரை ஆவிபறக்கும் சூடு: சின் ஹெங் மண்பானை பக் கூட் தே

குடும்பத்திற்குச் சொந்தமான இந்த உணவகம், சின் ஹெங் பக் கூட் தே (ஹாக்கியன் மொழியில் “புதிய நற்பேறு”) என்ற பெயரில் 1981-ல் தொடங்கப்பட்ட இரு பக் குட் தே (பன்றி விலா எலும்புகளை வேகவைத்த மிளகு அல்லது மூலிகைச் சாறு) கடைகளிலிருந்து தோன்றியது. அவ்விரு கடைகளையும் சகோதரிகள் தே சுய் ஹுவா, தே சியூ ஹுவா இருவரும் இரண்டு பிடோக் காப்பிக் கடைகளில் தொடங்கினர். தையல் வேலை செய்து வந்த அந்தச் சகோதரிகள், தங்களது சமையல் திறனைக்கொண்டு வருமானம் ஈட்ட விரும்பியதால் அதில் கால்பதித்தனர்.

 

1983-ல், அக்கா சூ ஹுவா, அவரது கணவர் எண்டி சூ, சியூ ஹுவாவின் கணவர் லிம் சீ குவாங் ஆகியோருடன் சேர்ந்து, 439 ஜூ சியாட் சாலை எனும் முகவரியில் சொந்த உணவகம் திறப்பதற்கான வாய்ப்பு சகோதரிகளுக்குக் கிடைத்தது. மற்ற பக் குட் தே கடைகளிலிருந்து வித்தியாசமாக இருப்பதற்காக, சின் ஹெங் உணவகம் மண்பானைகளை அறிமுகப்படுத்தி, கடைசித் துளி வரை ஆவிபறக்கும் சூட்டுடன் சாறு பரிமாறியது. இதுவே கடையின் சிறப்பு உணவாகப் பெயரெடுத்தது. 

 

1999-ஆம் ஆண்டில், நிப்பா கிருமி பரவலால் உணவகம் ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கியது. பொதுமக்கள் பன்றியிறைச்சி உண்பதைத் தவிர்த்ததால், சின் ஹெங் உணவகம் இரண்டு மாதங்களுக்கு மூடப்பட்டது. இருந்தாலும், தே சகோதரிகள் மனம் தளரவில்லை. இனிப்புப் புளிப்பு மீன், தாய்லாந்து பாணி கோழி போன்ற புதிய பதார்த்தங்களை அறிமுகப்படுத்தி உணவகத்தை மீண்டும் திறந்தனர். இன்று, தனது பக் குட் தே சாறுக்குத் துணையாக, கேட்டவுடன் சமைத்துத் தரப்படும் பிரபலமான ஜி சார் உணவு வகைகளையும் சின் ஹெங் உணவகம் தொடர்ந்து பரிமாறி வருகிறது.

 

குடும்பத்தின் இரண்டாம் தலைமுறையினரால் இப்போது நடத்தப்படும் சின் ஹெங் உணவகம், ஜூ சியாட்டில் பலரது பாராட்டையும் பெற்ற உணவகமாகப் பெருமையுடன் திகழ்கிறது. முக்கிய தருணங்களைக் கொண்டாடும் குடும்பங்களும், ஆண்டுகள் கடந்தாலும் தரமும் சுவையும் மாறாத நறுமணச் சாற்றில் விலா எலும்புகளைச் சுவைக்க விரும்பும் வாடிக்கையாளர்களும் உணவகத்திற்குத் திரும்பத் திரும்பச் செல்கின்றனர். 

புதுவடிவம் பெற்ற பாரம்பரியப் பலகாரங்கள்: டி’பன்



லீ மீமீ 1991-ல் தொடங்கிய டி’பன் கடை, விழாக்காலங்களில் பெரிதும் நாடப்படும் பலவிதமான பலகாரங்களுக்குப் பெயர்ப்பெற்று விளங்குகிறது. நல்லுணவின் மீதிருந்த பிரியத்தால், லீ முதன்முதலில் பார்க்வே பரேட் கடைத்தொகுதியின் கீழ்மாடியில் பாரம்பரியத் தின்பண்டங்கள் விற்கும் ஒரு கடையைத் திறந்தார்.

 

அந்தக் காலகட்டத்தில் “டி” என்ற ஆங்கில எழுத்திலிருந்து தொடங்கிய “டெலிஃபிரான்ஸ்” போன்ற பிரபலமான தேநீரகங்களின் பெயர்களால் கவரப்பட்ட லீ, தனது கடைக்கு “டி’பன்” என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார். ஆரம்பத்தில் சிறிய அளவிலான பன்ரொட்டிகளில் அவர் கவனம் செலுத்தினார். அவரது கடையின் தனிச்சிறப்புமிக்க சார்சியூ பாவ் (அனலில் வாட்டிய பன்றியிறைச்சி பன்ரொட்டி), டா பாவ் (நறுக்கிய பன்றியிறைச்சி பன்ரொட்டி) ஆகியவை அதில் உள்ளடங்கின. இவற்றுக்குக் கிடைத்த அமோக வரவேற்பினால், அதே ஆண்டில் 358 ஜூ சியாட் சாலை எனும் முகவரியில் முழு அளவிலான பேக்கரிக் கடையாக டி’பன் விரிவடைந்தது. ஆரம்பத்தில் திறன்பெற்ற ரொட்டி தயாரிப்பு வல்லுநரை டி’பன் சார்ந்திருந்தாலும், லீ முழு ஈடுபாட்டுடன் முயற்சி எடுத்து செய்முறைகளைச் சீரமைத்தார். அதோடு, கையால் வெட்டி தாமரை வடிவில் நேர்த்தியாக வடிவமைக்கப்படும் லியன் யுவா தாவ் (நீண்டாயுள் பன்ரொட்டி) போன்ற புதுமைகளையும் அறிமுகப்படுத்தினார்.

 

1999-ல் ஏற்பட்ட நிப்பா கிருமிப் பரவலால் வியாபாரம் பெருமளவு பாதிப்படைந்தது. பொதுமக்களின் அச்சத்தால் பன்றியிறைச்சிப் பன்ரொட்டிகளைச் சாப்பிடுவோர் குறைந்தனர். இதனால், டி’பன் கடையில் மேலும் பலவிதமான தயாரிப்புகளை லீ அறிமுகப்படுத்தினார். டுரியான் நிரப்பிய “கொய்” மீன்வடிவப் பலகாரம், சீன ராசிமண்டல விலங்கு வடிவ பன்ரொட்டிகள் போன்றவை அதில் உள்ளடங்கின. இந்த முனைப்பினால், பருவகால “மூன்கேக்” பணியாரங்களும் தினந்தோறும் சுடச்சுடத் தயாரிக்கப்படும் அரிசி டம்ப்ளிங்ஸ் பலகாரமும் அறிமுகமாயின.

 

இன்று, பாரம்பரியப் பலகாரங்களை அடிப்படையாகக் கொண்டு புதுமையான தயாரிப்புகளை ஆண்டுதோறும் அறிமுகப்படுத்தும் பாரம்பரியத்தை டி’பன் நிலைநிறுத்தியுள்ளது. அதன் பிஸ்தா, சீஸ்கேக் “மூன்கேக்” பணியாரங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள். தனது மகள் செரினாவுடன் சேர்ந்து, உள்ளூர் உணவுப் பாரம்பரியங்களில் நவீனச் சுவைகளைப் புகுத்தி கையால் செய்யப்படும் இன்சுவைப் தயாரிப்புகளை லீ தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார்.

 

 
close button
hhlogo